சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை

விக்கிமூலம் இலிருந்து

வெளியீடு: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்
நாள்: நவம்பர் 03, 2007
இணைப்புகள்:[1]


ஈழத் தமிழர்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஒலித்து வந்த தமிழ்ச்செல்வனை, இலங்கை விமானப் படையினர் குண்டுவீசிக் கொன்றுள்ளனர் என்ற செய்தி, உலகத் தமிழர்களுக்கு மட்டும் இன்றி, அமைதியையும் மனித உரிமையையும் மதிக்கும் உலக மனித சமுதாயத்திற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைதிக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான இலங்கை அரசின் போர்வெறி பிடித்த இந்த இனவெறித் தாக்குதலை மனித குலம் நிச்சயம் மன்னிக்காது. அதிலும் குறிப்பாக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கை இனச்சிக்கலுக்கு அமைதிப் பேச்சு மூலம் தீர்வு காண்பதற்காக நார்வே போன்ற நாடுகளின் முயற்சியால் நடைபெற்ற எல்லா அமைதிப் பேச்சுகளிலும் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவர் தமிழ்ச்செல்வன். அவரின் மரணம் ஈழத் தமிழர்களுக்கெல்லாம் பேரிழப்பு. அவர்களின் சிக்கல்களுக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவு.

தமிழ்ச்செல்வனைக் குண்டுவீசிக் கொன்ற படுபாதகச் செயல் மூலம் சமாதானத்திற்கான அமைதிப்பேச்சில் துளி அளவு கூட நம்பிக்கை இல்லை என்பதையும், ஈழத் தமிழர்களைப் பூண்டோடு அழித்து, இலங்கையில் தமிழ் இனமே இல்லாமல் செய்வதன் மூலம் இனச் சிக்கலுக்கு தீர்வு காணவேண்டும் என்ற வெறியுடன், இலங்கை அரசு செயற்பட்டுக்கொண்டு இருப்பதையும் தெளிவாக்கியிருக்கிறது.

தமிழர்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசு திட்டமிட்டு சிங்களர்களைக் குடியமர்த்திக்கொண்டு வருகிறது. தலைநகர் கொழும்புவில் பல்லாண்டு காலமாக வசித்து வரும் தமிழர்களை எல்லாம் துப்பாக்கி முனையில் வெளியேற்றிக்கொண்டு வருகிறது. தமிழ் ஈழப் பகுதிகளில் 15 வயதுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை எல்லாம் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கடத்திச் சென்று படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இத்தகையை அடாத செயல்கள் மூலம், உலகிலேயே மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுகிற நாடு என்று இலங்கை தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான அமைப்பின் கண்டனத்தையும் மனித உரிமைகளை மதிக்கும் உலக நாடுகளின் கண்டனத்தையும் இலங்கை அரசு பெற்றிருக்கிறது.

நமக்கு கூப்பிடும் தொலைவில் உள்ள பக்கத்து நாட்டில் இத்தனை கொடுமைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அங்கே கொடுமைகளுக்கு இலக்காகியிருக்கும் மக்களுடன் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள தமிழர்கள் வசிக்கும் இந்தியா, இதை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையையும் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் அதற்குக் காரணமான ராணுவ நடவடிக்கைகளையும் இந்தியா சகித்துக்கொண்டு இருக்கக்கூடாது.

ஈழத் தமிழர்களைப் பூண்டோடு அழித்து ஒழிக்கும் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, பேச்சின் மூலம் ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளையும் மனித உரிமைகளையும் வழங்கவேண்டும் என்று இலங்கையை இந்திய அரசு வற்புறுத்தவேண்டும். தாமதம் இன்றி இத்தகையை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாய்த் தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களின் சார்பில், இந்திய அரசுக்கு, தமிழக முதலமைச்சர் கருணாநிதி உணர்த்தவேண்டும். இதில் தாமதித்தால் இலங்கையில் தமிழ் இனமே கூண்டோடு ஒழிக்கப்பட்டுவிடும். இந்த ஆபத்தைத் தடுத்துநிறுத்த தாயகத்துத் தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல்கொடுக்க முன்வரவேண்டும். இது தொடர்பாக முதலமைச்சருக்கும் இன்று ஒரு கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறேன் என்றார் அவர்.