Tamil Proverbs/ஆ

From Wikisource
Jump to navigation Jump to search
3759875Tamil Proverbs — ஆPeter Percival

ஆ.

  1. ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.
    A scoffer will be destroyed.

  2. ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?
    If a child be born at an inauspicious time what evil will it occasion to a neighbour?

  3. ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.
    In a false almanac, the sixty hours are to be rejected.
    In astrological calculations a time of three and three quarters to four Indian hours (நாழிகை 24 minutes) for the asterism that rules the day is considered unlucky: it is called தியாச்சியம் rejected.
    An imperfect or uncertain formula should be wholly rejected.

  4. ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்.
    The family of the wicked must be destroyed by associating with it.

  5. ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.
    If about to undertake a difficult work do so after due inquiry.

  6. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சியா?
    Is a brahmanicide a suitable witness for an abandoned wretch?

  7. ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறதுபோல.
    Like pointing out the middle of the sky.
    An impossibility.

  8. ஆகாயத்தைப் பருந்து எடுத்துக்கொண்டு போகுமா?
    Can a hawk carry away the sky?

  9. ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்கிறான் குரு.
    The spiritual guide observed, I will teach you how to fly through the air, take me up and convey me to the other side of the river.

  10. ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.
    A powerful thunder-clap will occasion tremor.

  11. ஆகாயமட்டும் அளக்கும் இருப்புத்தூணைச் செல்லரிக்குமா ?
    Will white ants destroy an iron pillar that reaches to the clouds?
    The proverb was used by Sita when speaking to Ravana.

  12. ஆகாயம் பார்க்கப்போயும் இடுமுடுக்கா ?
    Is there not sufficient space for one to go and look at the sky?

  13. ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா?
    Can the air be bit so as to leave a mark?

  14. ஆகாயம் பெற்றது, பூமி தாங்கினது.
    The sky brought forth, the earth supported.

  15. ஆகிறகாலத்தில் அவிழ்தம் பலிக்கும்.
    If favoured by fortune medicine will take effect in due time.

  16. ஆகுங்காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்
    In times of prosperity, even a slave woman may bring forth a female child.

  17. ஆகுங்காய் பிஞ்சிலயே தெரியும்
    A sound fruit may be known when it begins to set.

  18. ஆகுங்காலம் ஆகும், போகுங்காலம் ஆகும்.
    In auspicious times it succeeds, in inauspicious times it fails.

  19. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறானா?
    Will he who waited till it was cooked, not wait till it cools?

  20. ஆக்கிற் குழைப்பேன், அரிசியாய் இறக்குவேன்.
    Should I cook I shall spoil the rice, either by under or over doing it.

  21. ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.
    Rule will last but half an hour where discipline and authority do not exist.

  22. ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.
    If the cook be weary, the hearth will be useless; if she who pounds the rice be weary the mortar will be useless.

  23. ஆங்காரிகளுக்கு அதிகாரி.
    The chief of the proud.

  24. ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்.
    She exclaims Sangará, Sangará at death having through life been given up to lewd behaviour.

  25. ஆசரித்த தெய்வம் எல்லாம் அடியோடே மாண்டது.
    All the deities that were venerated have entirely perished.

  26. ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்துபோனேன்.
    By being associated with the base and by speaking hypocritically I have forfeited my dwelling-place.

  27. ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.
    The virtuous are not affected by blessing and cursing.

  28. ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.
    His mind is fixed upon her, his body is on the mat.

  29. ஆசை அறுபது நாள், மோகம் முப்பதுநாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.
    Sixty days of excessive desire, thirty of enjoyment; when the ninety are over, the remaining time is as useless as a worn-out broom.

  30. ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.
    If evil desire spring not sorrow will not approach.

  31. ஆசை உண்டானால் பூசை உண்டு.
    If there be heartfelt love, there will be deferential regard.
    Spoken of a devoted wife who has a cruel husband.

  32. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
    As long as desire continues, there will be anxiety also.

  33. ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.
    Persons of inordinate desire have no shame.

  34. ஆசைக்கு அளவில்லை.
    Desire has no limits.

  35. ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?
    Is it to deceive after using enticing words?

  36. ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?
    What remedy is there for love-sickness?

  37. ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.
    As desire increases, anxiety increases.

  38. ஆசை பெரிதோ, மலை பெரிதோ ?
    Which is greater, (human) desire or a mountain?

  39. ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.
    What was desired is now disgusting.

  40. ஆசையெல்லாம் தீர அடித்தாள் முறத்தாலே.
    She beat him with the winnowing fan to banish all his desires.

  41. ஆசை வெட்கம் அறியாது.
    Desire knows not shame.

  42. ஆசை வைத்தால் நாசம்.
    Cherished desire ends in ruin.

  43. ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.
    O mother, mother, do not speak so much.
    ஆச்சி is a provincialism for ஆயி.

  44. ஆடப் பாடத் தெரியாது இரண்டு பங்கு உண்டு.
    Neither able to sing nor dance, but he has two shares.

  45. ஆடமாட்டாத தேவடியாள் கூடம் போதாது என்றாள்.
    The temple girl who could not dance said that the hall was not large enough.

  46. ஆடவிட்டு நாடகம் பார்க்கிறதா ?
    Is it to look at the drama after having encouraged a profligate course?
    Spoken ironically.

  47. ஆடாஜாதி கூடாஜாதியா ?
    Are those unfit for the drama unfit for every thing?

  48. ஆடாது எல்லாம் ஆடி அவரைக்காயும் அறுத்தாச்சுது.
    All is done and the avarai fruit is cut?
    Indicating decayed circumstances.

  49. ஆடி அறவெட்டை அகவிலை நெல்விலை.
    July harvest having failed, the price of dry grain is that of paddy.

  50. ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.
    The comedy began and ended in an hour.

  51. ஆடி ஓய்ந்த பம்பரம்.
    A top that spins no longer.

  52. ஆடிக் கரு அழிந்தால் மழை குறைந்துபோம்.
    If the embryo clouds of July fail rain will be scant.

  53. ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.
    A restless cow must be milked by force, and a gentle cow must be milked with kindness.
    Treatment to be regulated by circumstances.

  54. ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.
    As dry leaves falling in the winds of July.

  55. ஆடிக்காற்றில் எச்சிற் கல்லைக்கு வழியா?
    Is there any way of escape for a leaf-plate before the wind of July?

  56. ஆடிக்காற்றிலே இலவம்பஞ்சு பறந்ததுபோல.
    Like silk-cotton scattered by the wind of July.

  57. ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி.
    Seek, seize her by the hair, and slipper a mother-in-law who does not invite you in July.
    The parents of a newly married woman separate her from her husband, that she may be under their care during the first year of marriage, in the month of July. This is necessary to prevent conception in that month and delivery in the following April. The birth of a first child in April if a son is believed to bring ruin upon a family.

  58. ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.
    They say that the cuff was given in July, and the pain felt in August.

  59. ஆடிய காலும் பாடிய மிடறும்.
    A dancing foot and a singing throat.

  60. ஆடி விதை தேடிப்போடு.
    Provide seed-corn and sow in July.

  61. ஆடு இருக்க இடையனை விழுங்குமா?
    While there are sheep will it (the tiger or wolf) swallow the shepherd?

  62. ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.
    He stares like a thief who has stolen a sheep.

  63. ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.
    The shepherd is trembling aloft fearing the sheep may bite him.

  64. ஆடு காற்பணம் வால் முக்காற்பணம்.
    The price of the sheep is a quarter of a fanam that of its tail three fourths of a fanam.

  65. ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.
    Not even hair is found where sheep were penned.

  66. ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.
    A place where sheep were penned and a place once occupied by an Agambadyan are profitless.

  67. ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.
    Not a leaf will be found where the sheep lay.

  68. ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.
    The fattening of the sheep is an advantage to the shepherd.

  69. ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான்.
    He that has bought a sheep will wander about; he that has bought fowls will go about crying them for sale.

  70. ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
    Will the shepherd who refused to give a sheep give a cow?

  71. ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?
    Will a sheep lead itself when the shepherd is absent?

  72. ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.
    Though he may fall headlong when dancing, he will not thereby meet with greater success.

  73. ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன் ஆவான்.
    If one should fall headlong when he ought to be active, he will be so impoverished as to possess only broken pots and an alms-dish.
    Indolence in youth leads to poverty in old age.

  74. ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.
    If one say, O my teacher, can the sheep be of any use to you, he replies yes, all except the horns and the hoofs.

  75. ஆடு தழை தின்பதுபோலே.
    Like a goat cropping leaves.

  76. ஆடு நனைகிறதென்று கோனாய் அழுகிறதாம்.
    It is said that the wolf wept because the sheep were wet.

  77. ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
    Will the pen be put up where the sheep may wish?

  78. ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான்.
    If the sheep should recover, he will not give even a hair.
    Said where benefits are not requited.

  79. ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.
    The dam at home, the lamb in the jungle.

  80. ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
    He who is naked is but half a man.
    Self-respect essential.

  81. ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
    If the cream be consumed, can butter be obtained?

  82. ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும்.
    The lapwing will by it’s cries betray whether he who approaches be the owner or a thief.

  83. ஆட்காட்டி தெரியாமல் திருடப்போகிறவன் கெட்டிக்காரனோ, அவன் அறியாமல் அவன் காலடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ?
    Which is the cleverer, the thief that goes out to steal taking care that the lapwing does not see him, or he that follows the track of that thief?

  84. ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்.
    A stupid servant to a shepherd.

  85. ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பால் இல்லை.
    Possessed of sheep by the thousand, of cattle by the thousand, he has not a spoonful of milk at home.

  86. ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது.
    The tail of the sheep is proportioned to its size.

  87. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயம்பிடாரிக்கு மூன்று கொம்பு.
    Sheep and oxen have two horns, an Aiyam pidári has three.

  88. ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி?
    Can an old tiger be overcome by a sheep?

  89. ஆட்டுக்கும் மாட்டுக்குமுறையா, காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா?
    Are relationships observed among sheep and oxen? have woods and uncultivated tracts any line of demarkation?

  90. ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல.
    As the wolf entered the sheepfold.

  91. ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.
    The fate of the lamb is that of its dam.

  92. ஆட்டுத்தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல.
    As the washerman flies at the sheep's head.

  93. ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.
    The butter the sheep yields is not enough (to stew) the marrow with.

  94. ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.
    He causes them to dance and beats the drum.

  95. ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?
    What, thousands of gold for a young sheep?

  96. ஆட்டுக்குட்டிக்கு ஆணையைக் காவுகொடு.
    Sacrifice an elephant for the sake of a kid.

  97. ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.
    The story of one who wandered through the jungle in search of a lamb that he had on his shoulder.

  98. ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.
    He aims to catch the leopard by exposing the sheep.

  99. ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப்பார்க்க, வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது நல்லது.
    It is better to build a house and set fire to it, than to buy sheep and place them under the care of others.

  100. ஆட்டைக்கொருமுறை காணச் சோட்டை இல்லையோ?
    Have you no desire to see us at least once a year?

  101. ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.
    Broth and curry ought to be prepared with all their ingredients.

  102. ஆணவத்தால் அழியாதே.
    Do not destroy yourself by pride.

  103. ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.
    Standard gold, and a woman at one with her mother-in-law are rare.

  104. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.
    Although one may injure a man, a woman may not be injuriously treated.

  105. ஆணை அடித்த வளர், பெண்ணைப் போற்றி வளர்.
    Train a boy strictly, but a girl kindly.

  106. ஆணையும் வேண்டாம் சத்தியமும் வேண்டாம் துணியைப்போட்டுத் தாண்டு.
    Neither swearing nor oaths are required, put down the cloth and stride over it.

  107. ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
    The austerity of those who are ignorant of the Supreme is as profitless as soil at the foot of a dead tree.

  108. ஆண்டாருக்குக் கொடுக்கிறையோ சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறையோ?
    Do you give to mendicants, or to the hard shell of the bottle-gourd?

  109. ஆண்டார் இருக்குமட்டும் ஆட்டும் கூத்தும்.
    While the head of a family lives, prosperity may be enjoyed.

  110. ஆண்டிகள்கூடி மடம் கட்டினாற்போல.
    Like mendicants combining to build a choultry.

  111. ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.
    The mendicant lies in the choultry and his bag in the street.

  112. ஆண்டிக்கு இடச்சொன்னால் தாதனுக்கு இடச்சொல்லுகிறான்.
    When told to give rice to the Saiva mendicant, he says give it to the Vaishnava mendicant.

  113. ஆண்டிக்கு வாய்ப்பேச்சு பார்ப்பானுக்கு அதுவும் இல்லை.
    To the religious mendicant a word, to the brahman not even that.

  114. ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் அவம்.
    The five children borne by the mendicant’s wife are all weaklings.

  115. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
    When the son of a mendicant assumes a mendicant’s profession, he will blow his conch at the proper time.

  116. ஆண்டியை அடித்தானாம் குடுவையை உடைத்தானாம்.
    It is said that he beat the mendicant and broke his alms-dish.

  117. ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.
    The Saivite and the Vaishnavite mendicants are as a water-pot and its cord.
    United or separate.

  118. ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான்.
    When he meets a Saiva mendicant he is a Lingan, and when he meets a Vaishnava mendicant he is a Rangan.

  119. ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.
    When two mendicants embrace each other, the ashes of the one cleave to the other.

  120. ஆண்டி வேஷம்போட்டும் அலைச்சல் தீரவில்லை.
    Though he assumed the guise of a mendicant, his troubles did not cease.

  121. ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.
    If a mendicant be struck on his posteriors, ashes fly.

  122. ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.
    Kár rice a year old, and newly reaped Samba (superior rice) are rare to the eye of a cultivator.

  123. ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.
    If the year withhold her increase, even the menial servants will neglect to do obeisance.

  124. ஆண்டைமேற் கோபம் கடாவின்மேல் ஆறினான்.
    He wreaked his anger against his master on the male buffalo.

  125. ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கைச்சி ஒத்திரார்கள்.
    A thousand men may live together in harmony, whereas two women are unable to do so although they be sisters.

  126. ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின்மேற் குறைசொல்லுவான்.
    The coward blames his weapon.

  127. ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.
    A comfortless word, and a palmira rafter without a bolt are of no use.

  128. ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?
    Will a chetty (a merchant,) take his departure by a river without gain?

  129. ஆதாயமில்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?
    Will a chetty dam up a river and drain out its waters for nothing?

  130. ஆதினக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
    Is a man possessed of landed property without a legal instrument?

  131. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
    The over-hasty is wanting in sense.

  132. ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
    Will the over-hasty be nice about family pedigrees?

  133. ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.
    The hasty is gratified at the instant.

  134. ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.
    While his mother is in extremity, her grown up son is crying for butter-milk.

  135. ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.
    He who possesses no property is but half a man.

  136. ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
    A man of wealth is the slave of his possessions.

  137. ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.
    The wealthy are not exposed to immediate ruin.

  138. ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.
    The owl is small, its screech is loud.

  139. ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.
    He who helps another in his misfortune becomes his master.

  140. ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
    Prosperity and adversity are common to all.

  141. ஆபத்துக்குப் பாவம் இல்லை.
    A thing done through necessity is no crime.

  142. ஆபத்துக்கு உதவினவனே பந்து.
    He is a friend who aids in adversity.

  143. ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.
    The condition of one’s elder sister may be ascertained by attending her wedding.

  144. ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.
    As the monkey perished by drawing out a wedge.

  145. ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?
    If castor seed (palma christi) be sown will àchcha (ebony) spring up?

  146. ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?
    Are the nuts of the castor plant pearls?

  147. ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?
    Will he sow castor and cotton seeds in close proximity?

  148. ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.
    The tortoise or a turtle is in the well, the squirrel is on a branch.
    Said of two things or persons not found together.

  149. ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம் அது சொன்னாற் பாவம்.
    They will catch the turtle, they will turn it on its back, for me to say so would be a crime.
    Indicating that it is more dangerous to speak of the crime of another than to commit it.

  150. ஆமுடையானைக் கொன்ற அறநீலி.
    A most abandoned woman who murdered her own husband.

  151. ஆமுடையான் செத்தபின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது.
    The woman became wise after the death of her husband.

  152. ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.
    A blear-eyed man became the husband of a woman who had been crying for one.

  153. ஆமுடையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பாளென்று அழுகிறேன்.
    I do not weep because my husband has beaten me, but because my rival will laugh at me.

  154. ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.
    When, in great extremity she was mourning the death of her husband, a neighbour came and attempted to tickle her under the arm.

  155. ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.
    The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.

  156. ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.
    No matter what the circumambulation of a husband may be, he enters his house by the door.

  157. ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குக் பொய் சொல்லலாமா?
    True, you may utter a falsehood to your husband, but can you deal falsely with the hearth?

  158. ஆமுடையானை வைத்துக்கொண்டல்லோ அவசாரியாடவேண்டும்?
    It is while she has a husband, is it not, that a woman should play the harlot?

  159. ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன்?
    Of what use is the favor of a midwife to her who has lost her husband?

  160. ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்.
    If your husband be a powerful man, you may ascend the dunghill to fight.

  161. ஆமை திடரில் ஏறினாற்போல.
    As if a tortoise or turtle crept up a hillock.

  162. ஆமையுடனே முயல் முட்டையிடப்போய்க் கண்பிதுங்கிச் செத்ததாம்.
    It is said that when the hare went with the tortoise to lay eggs it strained its eyes out and died.

  163. ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்வது.
    It is not difficult for one to win who understands the tricks of dice.

  164. ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
    The brahmanicide is the witness of the custom officer.

  165. ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.
    The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five.

  166. ஆயத்திலும் நியாயம் வேண்டும்.
    Even in gain justice is required.

  167. ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.
    Hire for the horse, nothing for its colt.

  168. ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.
    Like swimming the river to avoid the tax.

  169. ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.
    Do not commit injustice at the custom-house.

  170. ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி போதும்.
    One grain destroying insect will consume a thousand grains of rice.

  171. ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டதுபோல.
    As a swan in the midst of a thousand crows.

  172. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.
    Like a single stone thrown at a thousand crows.

  173. ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.
    Can a thousand props support the universe?

  174. ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.
    A thousand bonds may equal the strength of an elephant.

  175. ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.
    Though a thousand times admonished, a faithless woman will not become a faithful wife.

  176. ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினதுபோல.
    Like one born with a thousand stretched out his legs with five-hundred.

  177. ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.
    Beauty is found only in one of a thousand.

  178. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
    The combined light of a thousand stars is not equal to a single moon.

  179. ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
    A thousand sixteenths make sixty-two and a half.

  180. ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.
    He whose fortune amounts to thousands is quiet, while the rag-gatherer leaps for joy.
    Dignity is characteristic of the worthy, and levity of the worthless.

  181. ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.
    Though it may bring in thousands, the occupation of a tax-gatherer is bad.

  182. ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.
    Although one may live a thousand years an unnatural death is bad.

  183. ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.
    Although one has acquired a thousand arts, he will still feel the necessity of earthly show.

  184. ஆயிரம் பெயரைக் கொன்றவன் அரைவைத்தியன்.
    He who has killed a thousand persons is half a doctor.

  185. ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
    Though a thousand may thereby be obtained, impetuosity is not good.

  186. ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.
    Though a thousand persons unite, they cannot kill a single grain-insect.

  187. ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?
    After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?

  188. ஆயிரம் அரைக்காற்பணம்.
    A thousand eighths of a fanam.

  189. ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.
    Half a letter is equal to a thousand words.

  190. ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக்கொண்டால் நஷ்டமா?
    Will it prove a loss if one of a thousand cows kicks?

  191. ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கும் இல்லை.
    Although born of a father possessed of a thousand palmira trees, he has not a fibre with which to pick his teeth.

  192. ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல.
    Like a toad among a thousand serpents.

  193. ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துச் சவுக்கு.
    Half a fanam to buy a whip for a horse worth thousands of gold.

  194. ஆயிரம் நற்குணம் ஒரு லோபகுணத்தால் கெடும்.
    A single avaricious desire will destroy a thousand good qualities.

  195. ஆயிரம் பொன்பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.
    Even a horse worth thousands of gold may require a whip.

  196. ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
    Tell lies by the thousand and build a temple.

  197. ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
    One of a hundred makes a skilful swords-man.

  198. ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?
    What! strike the unarmed?

  199. ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.
    Like seeking a weapon in the face of battle.

  200. ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.
    It rains in successive torrents.

  201. ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
    An ill-considered undertaking may occasion the agony of death.

  202. ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
    A female with an inauspicious mark on the neck will prove an evil in a king’s palace.

  203. ஆரடா விட்டது மானியம் நானே விட்டுக்கொண்டேன்.
    Sirrah! who invested you with a free tenure, I did it myself.
    A long continued favour is regarded as a right.

  204. ஆராகிலும் படியளந்து விட்டதா?
    Has any one measured out my daily allowance?

  205. ஆராருக்கு ஆளாவேன் ஆகாத உடம்பையும் புண்ணையும் கொண்டு.
    How many shall I serve with this debilitated and ulcerated body?

  206. ஆராற் கெட்டேன் நாராற் கெட்டேன்
    By whom was I ruined, by twisted hemp.

  207. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.
    Although engaged in a mere puppet-show, one ought to keep the eye on the main chance.

  208. ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.
    He is fearless and shrinks not in the presence of any foe.

  209. ஆருக்கு ஆர் சதம்?
    Who is really true to another?

  210. ஆருக்கு பிறந்து மோருக்கு அழுகிறாய்?
    To whom were you born? you cry for butter-milk.

  211. ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
    Treachery against any man will be slowly requited, but treachery against one’s self will meet with immediate retribution.

  212. ஆருமற்றதே தாரம் ஊரில் ஒருவனே தோழன்.
    A wife who has no connections is to be preferred and so the friendship of one.

  213. ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.
    Who are related to each other? the mother and her child.

  214. ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம்.
    He is said to have performed Ashwamedha, (the sacrifice of a horse) in an uninhabited country.

  215. ஆரை நம்பித் தோழா காருக்கு ஏற்றம் போட்டாய்?
    My friend, on whom did you depend for assistance when you put up a picotta to irrigate the kár rice?
    An efficient picotta is worked by two, frequently by three men.

  216. ஆரோ செத்தான் எவனோ அழுதான்.
    Some one died: some one cried.

  217. ஆர் ஆத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்.
    In the morning it will be known whose mother is dead.

  218. ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது.
    Whomsoever you delay to pay, the debt of Mári must be at once discharged.
    Mári is the Goddess who presides over pestilence, &c.

  219. ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்?
    Whose family did you intend to ruin when you assumed the guise of a religious mendicant?

  220. ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி.
    No matter who pounds it if we obtain the rice.

  221. ஆலகால் விஷம் போன்றவன் அந்தரமாவான்.
    He who is as dangerous to society as the poison of a serpent will be ruined.

  222. ஆலசியம் அமிர்தம் விஷம்
    Indolence changes nectar into poison.

  223. ஆலமரம் பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினர்?
    Who informed the birds that the banyan tree was in fruit?

  224. ஆலின்மேற் புல்லுருவி
    A parasite on a banyan tree.

  225. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
    As the banyan and the acacia strengthen the teeth, so Náladiyar and Kural give force to speech.
    Náladiyar and Kural two celebrated poetic works on moral subjects.

  226. ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.
    I am become a bruised reed tossed on the waves.

  227. ஆலையம் அறியாது ஓதிய வேதம்.
    The temple understands not the hidden meaning of the Vedas.

  228. ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூச் சர்க்கரை.
    The flowers of the olive, Bassia, are regarded as sugar in a place without a sugar-cane mill.

  229. ஆலை விழுது தாங்குகிறாப்போலே
    As the pendulous roots of its branches support the banyan tree.

  230. ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே.
    If the banyan be in fruit, thither, if the arasu, hither, the birds flock.

  231. ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க.
    May you prosper as the banyan with its daughter-stems, take root like the wide-spreading arugu grass, and as the bamboo amid unfailing friends.
    A congratulatory expression to a newly married couple.

  232. ஆவணிமாதம் அழுகல் தூற்றல்.
    The month of August is attended with incessant drizzling.

  233. ஆவத்தை அடரான் பாவத்தை தொடரான்.
    He is not subject to calamity who pursues not a sinful course.

  234. ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?.
    What avails mere desire, he will live, will he not, if he swallows rice?

  235. ஆவாரை இலையும் ஆபத்துக்குதவும்.
    Even the leaves of the àvárai may be useful in misfortune.

  236. ஆவென்று போனபிறகு அள்ளி இடுகிறது ஆர் ?
    After his last gasp who will distribute our food?

  237. ஆவேறு நிறமானாலும், பால்வேறு நிறமாமோ ?
    Will the colour of the skin of a cow affect that of its milk?

  238. ஆழமறியும் ஓங்கில் மேளம் அறியும் அரவம்.
    The ónkil fish is acquainted with depth, and the snake knows the sound of a drum.
    This reference to the instincts of animals serves to indicate the aptitude &c., of individuals.

  239. ஆழம் அறியாமல் காலை யிடாதே.
    Do not step down unless you know the depth.

  240. ஆழாக்கு அரிசி மூழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும்.
    With an àlak of rice in hand and a pot that will suffice to boil only three fourths of it look at the ostentation the Mudaliar displays.

  241. ஆழியெல்லாம் வயலானால் என்ன அவனி யெல்லாம் அன்னமயமானால் என்ன ?
    What if the great deep were an extended field and all the world standing corn?
    Even then each could enjoy only what he might consume.

  242. ஆளமாட்டாதவனுக்குப் பெண்டேன் ?
    Of what use is a wife to him who cannot govern her?

  243. ஆளனில்லாத் துக்கம் அழுதாலுந் தீராது.
    The grief occasioned by the death of a husband will not be removed by a flood of tears.

  244. ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.
    She who has no husband is like sand in the bed of a river.
    Uncertain as to position.

  245. ஆளான ஆட்களுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காகா பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
    The raven demon crying for kanji when the well-to-do cannot obtain a grain of boiled rice.

  246. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
    Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.

  247. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.
    Being buffeted by every one, my head has become as large as a water-pot.

  248. ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான்.
    He may escape recognition in a crowd.

  249. ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.
    After ascertaining the character of the person he undermines his interests.

  250. ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.
    Man must be tested by man and fish by tamarind acid.

  251. ஆளை ஆள் குத்தும் ஆள்மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
    Personal valor enables one to encounter an enemy, but outward show will scare away ten.

  252. ஆளைச் சுற்றிப்பாராமல் அளக்கிறதா?
    What, do you take your measure of a person without eyeing him all around?

  253. ஆளைப் பார் முகத்தைப் பார்.
    Look at the person, look at his face.
    Spoken in derision of a boaster.

  254. ஆளைப் பார்த்து வாயால் ஏய்த்தான்.
    He eyed the man and deceived him by his talk.

  255. ஆள் ஆளைக் குத்தும், பகடம் பத்துப் பேரைக் குத்தும்.
    One man may stab one, threatening may stab ten.

  256. ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா ?
    Will a sword cut unwielded?

  257. ஆள் இருக்கக் கொலை சாயுமா ?
    Is he who is yet alive, murdered?

  258. ஆள் இல்லாப் படை அம்பலம்.
    Mere weapons are ineffective.

  259. ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
    When a dhony finds her steersman unskilful she pitches.
    Spoken of something going wrong from want of skill.

  260. ஆள் ஏற நீர் ஏறும்.
    As men embark, the surrounding water rises.

  261. ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.
    Though feeble in person, his weapon is powerful.

  262. ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
    When numerous fishermen combine together, multitudes of fish may be caught.

  263. ஆறல்ல நூறல்ல ஆகிறது ஆகட்டும்.
    Neither six nor a hundred are required, let that be which will be.

  264. ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆறான குடித்தனம் நீறா விடும்.
    If the sixth-born be a female, a family of overflowing wealth will be reduced to powder.

  265. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
    Death may occur at six, or at a hundred years of age.

  266. ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
    Cold kanji is old kanji.

  267. ஆறின புண்ணிலும் அசடு நிற்கும்.
    There will be a scab even after the wound is healed.
    Interrupted amity though restored will occasion suspicion.

  268. ஆறினால் அச்சிலே வார் ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
    If cool pour it into the mould, if not pour it into the large earthen pot.

  269. ஆறு கடக்குமளவும் அண்ணன் தம்பியெனல், ஆறு கடந்தால் நீயார் நானார்.
    To avow fraternal relationship until the river is crossed; and to ignore it om arriving at the opposite bank.

  270. ஆறு கலியாணம் மூன்று பெண்கள் மாரோடு மார் தள்ளுகிறது.
    Where six marriages are being celebrated three women are pressing and pushing.

  271. ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அ்விழ்ப்பானேன் ?
    Why loose your waist-cloth on mentioning that the river is yet ten miles off?

  272. ஆறு கெட நாணல் இடு ஊர்கெட நூலை இடு.
    Plant reeds to destroy a river, to destroy a country introduce yarn.
    Weavers who neglect tillage, and foul the water by dying processes &c are here referred to.

  273. ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி.
    The river has destroyed one half and the jungle the other.

  274. ஆறு நிறையச் சலம் போனாலும் பாய்கிறது கொஞ்சம் சாய்கிறது கொஞ்சம்.
    Though the river is in full flood part of it flows on in its course, and part diverges.

  275. ஆறு நிறையப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்.
    Though the river is full to overflowing, a dog laps.
    Amid the greatest abundance one can only enjoy what is required.

  276. ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?
    Having swum a river, will it be difficult for me to swim over a tank?

  277. ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?
    What is a mere channel to him who has swum a river?

  278. ஆறு நேராய்ப் போகாது.
    A river never flows straight.

  279. ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.
    A town in the course of a river will not endure.

  280. ஆறு பார்க்க போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.
    The old dame caught a cold by going to look at the river.

  281. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
    The flow of a river is its course, the utterance of a ruler is his decision.

  282. ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?
    Can a six months journey be accomplished if the party walks hesitatingly?
    An arduous enterprise requites unremitted exertion.

  283. ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.
    Six months in the jungle and six at home.

  284. ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.
    As Saturn seized one for six months together.

  285. ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை
    Debt is debt whether it amounts to six or a hundred; you fellow bake the cakes large.

  286. ஆறு வடிவிலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.
    Their severity is most felt, when a flood subsides, and a famine terminates.

  287. ஆறெல்லாம் கண்ணீர் அடி எல்லாம் செங்குருதி.
    All the way is bedewed with tears, and the foot prints are red with blood.

  288. ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.
    He aims to expose me, after comforting and abusing me.

  289. ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி.
    Drink sir, and drink the water that is flowing in the river.
    Spoken of apparent generosity which in reality costs nothing.

  290. ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.
    He has one foot in the river and one in mud.
    Said of one involved in inextricable difficulty.

  291. ஆற்றிலே போட்டாலும் அளந்துபோட வேண்டும்.
    Although you are throwing it into the river, measure it first.

  292. ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.
    Though water in a river is up to one’s ankle only, some will wade with hesitation.

  293. ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.
    Creeping along a river and sinking in the sand.

  294. ஆற்றிலே விட்ட தெர்ப்பைபோல் தவிக்கிறேன்.
    I am tossed about like a tuft of sacred grass that has been thrown into a river.

  295. ஆற்றிற் கரைத்த புளியும் அங்காடிக்கிட்ட பதருமாயிற்று.
    It is the pulp of the tamarind fruit dissolved in a river, and chaff sent to the bazaar.
    Said of things useless and unavailing.

  296. ஆற்றிற் பெருவெள்ளம் நாய்க்கென்ன சளப்புத் தண்ணீர்.
    The river is in flood, but what of that to a dog? it is only a fordable stream.

  297. ஆற்றுக்குப் பார்ப்பான் துணையோ, சோற்றுக்குப் பயற்றங்காய் கறியா ?
    Will a Brahman be of any use when one crosses a river, or pulse in pod serve for a curry?

  298. ஆற்றுக்கும் பயம் காற்றுக்கும் பயம்.
    Both the river and weather are dreaded.

  299. ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.
    I neither went to the river, nor put off my shoes.

  300. ஆற்றுப்பெருக்கும் அரசும் அரை நாழி.
    The flood of a river and the reign of a king last but half an hour.

  301. ஆற்று மணலை அளவிடக்கூடாது.
    The sands of a river cannot be counted.

  302. ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ எடுத்துக் குடிக்குமோ ?
    How does a dog drink the water of a river, by lapping or by lading?

  303. ஆற்றைக் கடந்தால்லோ அக்கரை ஏறவேண்டும் ?
    Before ascending its opposite bank it is necessary first, is it not, to cross the river?

  304. ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
    After crossing the river the boatman gets a cuff.

  305. ஆற்றைக் கடத்திவிடு ஆகாசத்திற் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான்.
    He says, carry me over the river and I will give you a pill that will enable you to fly through the air.

  306. ஆனதல்லாமல் ஆவதறிவாரோ ?
    Can one comprehend the future as well as the past?

  307. ஆன தெய்வத்தை ஆறு கொண்டுபோகிறது அனுமந்தராயனுக்குத் தெப்பத்திருவிழாவா ?
    After the river has carried away every imaginable deity, do you stay to celebrate an aquatic festival in honour of Hanuman?
    Said of one seeking the lesser aid when the greater has failed.

  308. ஆனமட்டும் ஆதாளியடித்துத்போட்டு, ஆந்தைபோல் விழிக்கிறான்.
    Having spent all he stares like an owl.

  309. ஆனமுதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.
    Having lost his capital, it will not be difficult for him to lose his reputation.

  310. ஆனவன் ஆகாதவன் எல்லாத்திலும் உண்டு.
    The good and the bad exist among all.

  311. ஆனால் அச்சிலே வார்க்கிறேன் ஆகாவிட்டால் மிடாவிலே வார்க்கிறேன்.
    If I succeed I will pour it into a mould, if not, into a large pot.
    Accommodating one’s conduct to circumstances.

  312. ஆனி அடியிடாதே கூனி குடிபோகாதே.
    Do not begin to build in June; nor set out to occupy a house in March.

  313. ஆனி அரை ஆறு, அவணி முழு ஆறு.
    In June half a river, in August a full river.

  314. ஆனி ஆனை வாலொத்த கரும்பு.
    In June sugar-cane is like an elephant’s tail.

  315. ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.
    An elephant moves when eating, a house eats without moving.

  316. ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.
    An elephant waits before the outer hall of a king’s court; a cat watches the putrid fish.

  317. ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா ?
    If an elephant fetch a thousand, will the mark of his footstep be worth so much?

  318. ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.
    A cat sits and mews in the place once occupied by the royal elephant.

  319. ஆனை இலைக்கறி பூனை பொரிக்கறி.
    An ordinary curry for an elephant and a superior curry for a cat.

  320. ஆனை உண்ட விளாங்கனி போல.
    Like a blighted wood-apple swallowed by an elephant.

  321. ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன் ?
    Why enter by a corner when mounted on an elephant?

  322. ஆனை ஏறித் திட்டிவாயில் நுழைவாரா ?
    Will one mounted on an elephant enter through a wicket?

  323. ஆனை ஒரு குட்டிபோட்டும் பலன், பன்றி பல குட்டிபோட்டும் பயன் இல்லை.
    It is of value though an elephant brings forth a single young one; but the many young ones of a pig are of no value.
    One good thing is better than ten bad ones.

  324. ஆனை கட்டத் தூர் வானமுட்டப் போர்.
    The stalks of the grain are so strong that an elephant may be tied to them, and the stacks are as high as the heavens.
    Said in exaggeration of an abundant harvest.

  325. ஆனை கண்ட பிறவிக்குருடர் அடித்துக்கொள்ளுகிறதுபோல்.
    As the blind quarrelled about an elephant they had examined.

  326. ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.
    Though black, an elephant will fetch a thousand gold pieces.

  327. ஆனை காணாமற்போனாற் குண்டுச்சட்டியில் தேடினால் அகப்படுமோ ?
    If an elephant be lost, is it to be sought in an earthen pot?

  328. ஆனை குண்டுச் சட்டியினும் குழிசியினும் உண்டோ ?
    Is the elephant in the rice-pot or in the water-pot?

  329. ஆனை கேட்ட வாயால், ஆட்டுக் குட்டி கேட்கிறதா ?
    What, does the mouth that asked for an elephant ask for a lamb?

  330. ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா ?
    Having given the elephant is there a dispute about the goad?

  331. ஆனை கொடிற்றில் அடக்குகிறதுபோல எந்தமட்டும் அடக்குகிறது ?
    How long shall I conceal it as an elephant incloses a thing in his jaws?

  332. ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
    The deceit of an elephant and the thievishness of a cat.

  333. ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.
    Keep away from an elephant sixty cubits, and from a dwarf seventy cubits.

  334. ஆனைக்கும் பானைக்கும் சரி.
    The same reason is applicable alike to elephants and earthen pots.

  335. ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.
    The elephant and tiger are afraid of fire.

  336. ஆனைக்கும் அடி சறுக்கும்.
    Even an elephant may slip.

  337. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா ?
    Will a lamb be famished in a place where elephants are fed?

  338. ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.
    As if a lion had entered a herd of elephants.

  339. ஆனைக்குத் தேரை ஊணா ?
    Are toads fit for elephant’s food?

  340. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.
    An elephant requires a goad, and boiled rice a chilli (condiment.)

  341. ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
    An elephant is not affected by sunshine or rain.

  342. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
    The elephant has its time, the cat also has its time.

  343. ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.
    Although dead, an elephant will fetch a thousand gold pieces.

  344. ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுகிறதோ ?
    What! does the hand that has caressed an elephant caress a sheep?

  345. ஆனை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும்.
    The elephant will put sand on its own head.
    To see this done by wild elephants when travelling through a jungle is very interesting.

  346. ஆனை தன்னைக் கட்டச் சங்கிலியைத் தானே கொடுத்ததுபோல.
    As an elephant gives the chain to tether himself.
    Said of one who, whether consciously or not, supplies means to his own disadvantage.

  347. ஆனை துரத்திவந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.
    Though chased by an elephant, it is not right to enter a temple.

  348. ஆனை நிழலைப் பார்க்கத் தவளை கலங்கினாற்போலே.
    As a frog trembled at the shadow of an elephant.

  349. ஆனை படுத்தால் ஆள்மட்டம்.
    When an elephant lies down its height will equal the stature of a man.

  350. ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா ?
    When an elephant lies down, will he be lower than a lamb?

  351. ஆனை பார்க்க வெள்ளெழுத்தா ?
    Are your eyes too dim to see an elephant?
    You must be blind indeed.

  352. ஆனை போன வீதி
    The street by which an elephant passed.

  353. ஆனைமிதிக்கப் பிழைப்பார்களா ?
    Has any survived after being trodden under foot by an elephant?

  354. ஆனை முட்டத் தாள் வானமுட்டப் போர்.
    Stubble as high as an elephant, stacks towering to the skies.

  355. ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?
    Is there not room for a lamb to crop its food in a jungle where elephants feed?

  356. ஆனைமேலே போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டாற்போல.
    Like asking chunam (lime) of one who is going along on an elephant.

  357. ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.
    As if an elephant’s load was transferred to a cat.

  358. ஆனையும் அறுகம்புல்லினால் தடைபடும்.
    Even an elephant may be impeded by arugu, Agrostis linearis, grass.
    This grass is sacred to Ganèsa.

  359. ஆனையும் ஆனையும் முட்டும்போது இடையில் அகப்பட்ட கொசுகுபோல
    As a gnat between two elephants that are brought into collision.

  360. ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.
    Give an elephant to a pundit, and a cat to a mountaineer.

  361. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்லமாட்டானா ?
    Is he who slew an elephant unable to overcome a cat?

  362. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பானேன் ?
    After having paid a thousand gold pieces for an elephant, why hesitate to buy an iron goad?

  363. ஆனையைக் குத்திச் சுளகாலே மூடுவாள்.
    She will stab the elephant and cover it with a sieve.

  364. ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.
    Having tied the elephant she will cover it with a winnowing fan?

  365. ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல.
    Like putting one’s hand into a water-pot in search of a missing elephant.

  366. ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.
    Having sold the elephant he begs for the goad.

  367. ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை, பூனையைத் தரையில் இழுக்குமா ?
    Can an alligator which can draw an elephant in water, drag a cat on dry ground?

  368. ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
    The sound of the bell is heard before the elephant makes its appearance.
    Spoken of events which cast their shadows before.

  369. ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டுக்குட்டியின் வால் பிடித்துக் கரையேறலாமா ?
    One can cross a river by holding the tail of an elephant, can one do so by holding the tail of a sheep?

  370. ஆனை விழுந்தால் கொம்பு, புலி விழுந்தால் தோல்.
    On the death of an elephant the tusk remains, on the death of a tiger the skin.

  371. ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி.
    A cat will be a small thing to an old dame who swallowed an elephant.

  372. ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.
    When down, an elephant is as high as a horse.

  373. ஆணை வேகம் அடங்கும் துறட்டியால்.
    The force of an elephant is subdued by the goad.